ashroff shihabdeen

இந்தப் பகுதிக்குள் பொதுவாக நான் எழுதிய கட்டுரைகள் அடங்கும்.

புத்தக விமர்சனங்கள், அவசியங்களுக்கு ஏற்ப தனி நபர்கள் குறித்து எழுதப்பட்டவை என்பனவற்றை இப்பகுதி கொண்டிருக்கும்.

எனது கருத்துக்கு மாற்றமான கருத்துக்களை நீங்கள் கொண்டிருக்கலாம். பகிர்ந்து கொள்ள விரும்புவோர் 0094 777 303 818 என்ற இலக்கத்துடன் அல்லது ashroffshihabdeen@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்குத் தொடர்பு கொள்ளலாம்

மன்னாரில் ஒரு செம்மொழி விழா

November 26, 2010


இருபத்தேழு வருடங்களுக்குப் பிறகு முதன் முறையாக மன்னார் செல்ல வேண்டி வந்தது மன்னார் தமிழ் செம்மொழி விழாவுக்காக.

 கொழும்பிலிருந்து ஏறக்குறைய 300 கிலோ மீற்றர்கள். தனி வாகனத்தில் ஒரு குதூகலப் பயணம் அது. மூத்த படைப்பாளிகளான ஜின்னாஹ் ஷரிபுத்தீன், அந்தனி ஜீவா, அல் அஸ_மத், கலைவாதி கலீல், தாஸிம் அகமது மற்றும் சட்டத்தரணியும் இலக்கிய ஆர்வலருமான மர்ஸ_ம் மௌலானா ஆகியோருடன் நானும் இணைந்து கொண்டேன். 

அக்டோபர் 22ம் திகதி முதல் 25ம் திகதி வரை நடைபெற்ற இவ்விழாவில் மூன்று முழுத் தினங்கள் நாங்கள் கலந்து கொண்டோம். விழாவின் ஆரம்ப தினமான வெள்ளியன்று பிற்பகலில் புறப்பட்ட பயணம் நள்ளிரவு 12.00 மணிக்கு மன்னாரில் முடிந்தது. இதனால் தொடக்க விழாவையும் இசை விழாவையும் நாங்கள் இழந்தோம்.

 செம்மொழி விழாவாக இதை மன்னார்த் தமிழ்ச் சங்கம் நடத்திய போதும் இவ்விழா ஒரு மாநாட்டின் எல்லையைத் தொட்டு நின்ற அழகைச் சொல்லியாக வேண்டும்.

 கலை, கலாசார, பொது நிகழ்வுகள் அனைத்தும் மன்னார் நகர மண்டபத்திலும் ஆய்வரங்கங்கள் சித்தி விநாயகர் இந்துக் கல்லூரியிலும் நடைபெற்றன. இரண்டாம் நாளிலிருந்து நகர மண்டபத்தில் நிகழ்வுகள் இடம் பெற்ற அதே வேளை சித்தி விநாயகர் இந்துக் கல்லூரியில் ஆய்வரங்குகளும் நடந்ததால் இங்கு கொஞ்ச நேரம் அங்கு கொஞ்ச நேரம் எனப் பங்கு கொண்டோம். மாலை நிகழ்வுகளில் முழுமையாகக் கலந்து கொள்ளக் கிடைத்தது. 

 இரண்டாம் நாள் காலை நகர மண்டபத்தில் “மொழியார்வம் நம்மிடையே முழுதாகி நிற்கிறது - முகமிழந்து போகிறது” என்ற தலைப்பில் பட்டி மன்றம் நடைபெற்றது. மன்னார்ப் பாடசாலைகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட மாணவ மாணவியர் இதில் கலந்து கொண்டனர். மன்றத்துக்கு தமிழருவி. த. சிவகுமாரன் தலைமை வகித்தார்.

 இதே வேளை ‘தமிழின் இலக்கியப் பாரம்பரியம்” என்ற தலைப்பில் நடந்த ஆய்வரங்கில் ‘தமிழகத்தின் இலக்கிய வேர்கள்;’ என்ற தலைப்பில் கலாநிதி துரை மனோகரன், ‘அனைத்திந்தியாவுடனான முதல் இலக்கிய ஊடாட்டங்கள்’ என்ற தலைப்பில் கலாநிதி வ.மகேஸ்வரன், ‘பக்திச் சுவை நனி சொட்டச் சொட்ட’ என்ற தலைப்பில் பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜா, ‘அனைத்திந்தியப் பண்பாட்டுக்கு தமிழின் பங்களிப்பு; எனும் தலைப்பில் சோ.பத்மநாதன் ஆகியோர் உரைநிகழ்த்தினர். கலாநிதி அ.சண்முகதாஸ் இவ்வரங்குக்குத் தலைமை வகித்தார்.    

மாலை நாட்டிய விழா இடம் பெற்றது. புஷ்பாஞ்சலி, சிவதரிசனம், குழு நடனம், வண்ண நடனம், கோலாட்டம், கிராமிய நடனம், கிராமிய வசந்தம், மன்னார் செவ்வியல் நடனம், பாங்ரா நடனம், காவடிச் சிந்து, நடன சங்கமம் போன்ற ஆடல் பாடல் நிகழ்வு வர்ணமயமாக அமைந்து மனதைக் கொள்ளை கொண்டது.

 ழூன்றாம் நாள் காலை “ஆதலினால் தமிழ் மேல் காதல் கொள்வீர்” என்ற தலைப்பில் கவிஞர் அகளங்கன் தலைமையில் கவியரங்கு இடம் பெற்றது. அந்தோனி முத்து, நெலோமி அன்ரனி குரூஸ், மன்னார் அமுதன், வஹீதா அவ்தாத், எஸ். சாந்த குமார் ஆகியோர் கவிதை படித்தனர். தலைமைக் கவிதை, நெலோமி, மன்னார் அமுதன் ஆகியோரின் கவிதைகள் ரசிக்கும்படி அமைந்திருந்தன.

 சித்தி விநாயகர் கல்லூரியில் நடைபெற்ற ஆய்வரங்குக்கு கலாநிதி எம்.ஏ.நுஃமான் தலைமை வகித்தார். “தமிழ் சர்வதேசியத்தை நோக்கி” என்பது ஆய்வரங்கத் தலைப்பு. கலாநிதி கி. விசாக ரூபன் ‘ஈழத்தில் தமிழ்’ எனும் தலைப்பிலும் கலாநிதி செ. யோகராசா ‘சிங்கப்பூர் முதல் அமெரிக்கா கனடா வரை’ என்ற தலைப்பிலும் அருட் கலாநிதி ஜெயசேகரம் ‘கிறிஸ்தவமும் தமிழ்ப் பண்பாட்டின் அயர்ச்சியும்’ என்ற தலைப்பிலும் முதுநிலை விரிவுரையாளர் ரமீஸ் அப்துல்லாஹ் ‘இஸ்லாம் தந்த தமிழ்’ என்ற தலைப்பிலும் விரிவுரையாளர் இரகுபரன் ‘ஆங்கில வருகையும் தமிழின் நவீனமயமாக்கலும்’ எனும் தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள்.

 மாலை நாடக விழா இடம் பெற்றது. மன்னார் கீரி சிறுவர் கழகத்தின் ‘முயலார் முயல்கிறார் வெற்றிக்காக’ என்ற நாடகம், மன்னார் திருமறைக் கலாமன்றத்தின் ‘ஞானசவுந்தரி’ இசை நாடகம், சித்தி விநாயகர் இந்துக் கல்லூரி மாணவரின் ‘கோலியம்’ ;, வங்காலை, ஆனாள் ம.மவி மாணாக்கரின் ‘தர்மத்தின் தீர்ப்பு’ ;, முருங்கன் முத்தமிழ் கலா மன்றத்தின் ‘கல்சுமந்த காவலர்கள்’ ஆகிய நாடகங்கள் அரங்கேறின. நாடகங்களைப் பொறுத்த வரை எதுவும் சிலாகித்துச் சொல்லக் கூடியவாறு அமைந்திருக்கவில்லை. ஆனால் அவர்களது முயற்சிக்கும் பங்களிப்புக்கும் நன்றி சொல்ல வேண்டும்.

 இறுதி நாளன்று காலை ஆய்வரங்கு மட்டுமே நடை பெற்றது. “மன்னார் மாதோட்ட மக்களின் வாழ்வியலும் கலை இலக்கிய முன்னெடுப்புகளும்” என்ற தலைப்பில் இடம் பெற்ற இவ்வாய்வரங்குக்கு முசலி கோட்டக்கல்விப் பணிப்பாளர் எஸ்டேவிட் தலைமை வகித்தார். ‘மன்னார் மக்களின் தொன்மையும் வரலாற்றுத் தொடர்ச்சியும்’ என்ற தலைப்பில் மு.சுந்தரம் பாண்டியன், ‘மன்னாரின் கூத்து மரபு; என்ற தலைப்பில் எஸ்.ஏ. உதயன், ‘மன்னார் மக்களின் வாழ்வியலும் நாட்டார் வழக்காறுகளும்’ என்ற தலைப்பில் பெப்பி விக்டர் லம்பேர்ட், ‘மன்னார் முஸ்லிம்களின் வாழ்வும் பண்பாடும்’ என்ற தலைப்பில் கலைவாதி கலீல், ‘ஈழத்தின் நவீன தமிழ் இலக்கியத்தில் மன்னார்;’ என்ற தலைப்பில் றெஜினா சந்தியோகு லோகு ஆகியோர் உரை நிகழ்;த்தினர். ஈவ்வாய்வரங்கில் மு. சுந்தரம் பாண்டியனின் உரை தெளிவானதாகவும் ஆய்வுத் தகவல்களுடனும் கூடியதாகவும் இருந்தமை குறிப்பிடத் தக்கது.

 மாலை இறுதி நாள் நிகழ்வுகளில் விருதுகள் வழங்கலும் சிறப்புரைகளும் இடம் பெற்று இரவு 8.30 அளவில் விழா நிறைவுற்றது.

 விருந்தினர்களும் வளவாளர்களும் பேராளர்களும் தங்குவதற்கு உணவுடன் கூடியதாக நகரிலிருந்து ஆறு கி.மீற்றர்களுக்கு அப்பால் அமைந்துள்ள ‘ஞானோதயம்;’ என்ற இடத்தை ஏற்பாடு செய்திருந்தார்கள். பஸ் வண்டி மூலம் அங்கிருந்து விழாவுக்கு அழைத்துச் சென்றார்கள். வேளை தவறாத உணவும் தேநீரும் தயார் செய்திருந்தார்கள்.  விழா அரங்கு நிறைந்திருந்த போதும் பேராளர்கள் மற்றும் விருந்தினர்கள் வந்தவுடன் தாம் அமர்ந்திருந்த ஆசனத்திலிருந்து எழுந்து அமரச் செய்த மன்னார் மக்களின் பண்பு மெச்சத் தக்கது. எவ்வளவு சன நெருக்கடியிருந்த போதும் சிற்றுண்டி, பான வகைகளைக் காலடியில் கொண்டு வந்த தருவதற்கும் அவ்வப் போது நீர்ப் போத்தல்களை வழங்குவதற்குமென தனியே ஒரு கூட்டமே நின்றிருந்தது. அவர்கள் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டேயிருந்தார்கள். சுருக்கமாகச் சொல்வதாயின் ‘பக்கா’ ஏற்பாடுகள்.

 வித்துவான் ரஹ்மான், லோறன்ஸ் புலவர், ராஜம் புஷ்பவனம், சுண்டிக்குளிப் புலவர், செபஸ்டியன் குரூஸ் அண்ணாவியார், முகம்மது காசிம் புலவர், கவிஞர் நாவண்ணன், தனிநாயகம் அடிகளார், ஆறுமுக நாவலர், ஏ.எம்.ஏ.அஸீஸ் ஆகியோர் பெயர்கள் அரங்குகளுக்குச் சூட்டப்பட்டிருந்தன.

 ஒரு விடயம் நடைபெறுவதன் மூலமே பல விடயங்களில் தெளிவு ஏற்படுகிறது. நடைபெறுவது நல்லதாயுமிருக்கலாம். கெட்டதாயுமிருக்கலாம். அந்த அடிப்படையில் எனக்கு ஏற்பட்ட சில புரிதல்களைப் பகிர்ந்து கொள்வதற்கு நான் விரும்புகிறேன்.

 எதையெடுத்தாலும் பேராசிரியர்களைக் கடவுளர்களாக்கும் ஒரு பண்பு இன்று நம் மத்தியில் வளர்ந்து வருவதாகத் தோன்றுகிறது. இப்படி நான் சொல்வதன் மூலம் அவர்களை நான் குறைத்து மதிப்பிடுவதாக அமையாது. அவர்களுக்கென்று சில போக்குகள் இருக்கின்றன. அவை எந்த அளவு சமூகத்துக்கும் நடைமுறைத் தேவைகளுக்கும் பயன்படுகிறது என்பது குறித்துச் சிந்தனைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.

 முதல் ஆய்வரங்கில் பேசிய இரண்டொரு பேராசிரியர்கள் ஆய்வரங்குக்கான தலைப்புகளைப் பேராசிரியர் சிவத்தம்பி வழங்கியதாகவும் அவர் தமது குரு என்றும் நெகிழ்ந்து உருகி வழிந்தார்கள். பாடசாலை மாணவர்களை மண்டபம் நிறைய அமர்த்தி விட்டு விஜய நகரப் பேரரசு பற்றியும் கல்வெட்டுக்கள் பற்றியும் கங்கை வென்றதும் கடாரம் வென்றதும் பேசிக் கொண்டிருப்பதால் இந்த நவீன உலகை எதிர் கொள்ளும் அவர்களுக்கு என்ன கிடைக்கப் போகிறது என்பது எனக்குப் புரியவில்லை. மாணவர்களது புரிதல்களுக்கு உட்பட்டவாறான உரைகளாகவும் அவை எனக்குத் தோன்றவில்லை. ஒரு சர்வதேச விழாவுக்குரிய ஆய்வரங்கை இந்த விழாவில் நடத்தியது பொருத்தமானதாக எனக்குத் தோன்றவில்லை. இவை கட்டுரை வடிவாக நூலில் வரவிருக்கையில் பேராசிரியர்களதும் மாணாக்கரதும் நேரத்தை வீணடித்ததாகவே எனக்குப் படுகிறது.

 கடந்த முப்பது வருடங்களில் நமது இலக்கியம் என்ன செய்தது? அதன் வீழ்சியும் எழுச்சியும் எத்தகைய வடிவினதாக அமைந்திருந்தது? நமது மொழி இன்று எந்த இடத்தில் இருக்கிறது? இலக்கியமும் நாடகமும் இசையும் எந்த இடத்தில் தரித்திருக்கிறது போன்ற தலைப்புக்களை நான் எதிர்பார்த்திருந்தேன். கிடைத்தது பெரிய ஏமாற்றமேயாகும். பேராசிரியர்கள் வந்து பேசிவிட்டால் எல்லாம் சரியாக அமைந்து விடும் என்ற நிலைப்பாடு குறித்துச் சற்று ஆழச் சிந்திக்க வேண்டும்.

 கவியரங்கில் மன்னார் பிரதேசத்தைப் பிரதிநித்துவப்படுத்துவோருக்கே இடமளிக்கப்பட்டிருப்பதாச் சொல்லப்பட்டது. பிரதேசக் கவியரங்குகள் நடைபெறும் போது வெளியிலிருந்து ஆகக் குறைந்தது இரண்டு கவிஞர்களைச் சேர்த்துக் கொள்வதானது பிரதேசக் கவிஞர்களுக்கு ஓர் உற்சாகத்தை வழங்கும். மேடைக் கவிதைகள் பற்றிய ஒரு நல்ல புரிதலையும் பார்வையாளர்களிடம் நல்ல ரசிப்புத் தன்மையையும் அது உருவாக்கும்.

 விருதுகளும் பொன்னாடைகளும் அதிகமாகவும் கல்வியலாளர்களுக்கும் அரச அதிகாரிகளுக்கும் வழங்கப்பட்டது பாராட்டுக்குரியதுதான். அதே வேளை பிரதேசத்தின் இளைய படைப்பாளிகளும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். எல்லாப் பிரிவினரையும் தமிழ்ச் சங்கம் கௌரவித்ததானது ஒரு நல்ல முன்மாதிரியாக இருந்தது.

 மன்னாரையொட்டிய மாவட்டங்களில் யாழ் மாவட்டத்திலிருந்தே அதிகம் பேர் கலந்து கொண்டிருந்தனர். அல்லது அழைக்கப்பட்டிருந்தனர். புத்தளம் மாவட்டத்திலிருந்து பேராசியரியர் எம்.எஸ்.எம். அனஸ், ஜவாத் மரைக்கார், அனுராதபுர மாவட்டத்திலிருந்து அன்பு ஜவஹர்ஷா போன்ற மூத்த எழுத்தாளர்களைக் காணக் கிடைக்கவில்லை. பேராசிரியர் அனஸ் குறித்து நண்பர் கலைவாதி கலீலிடம் வினவிய போது பேராசிரியரை அழைத்ததாகவும் அவர் தனக்கு வர வாய்ப்பில்லை என்று தெரிவித்ததாகவும் சொன்னார். மேற்குறித்த மூவரிடமும் தங்கள் வருகையை எதிர் பார்த்தோம் என்று சொன்ன போது தமக்கு இவ்விடயம் சம்பந்தமாக எந்த வித அழைப்போ தகவலோ கிடைக்கவில்லை என்று குறிப்பிட்டார்கள். மன்னாரைச் சேர்ந்த கலாநிதி ஹஸ்புல்லாஹ் ஆய்வரங்குக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அழைப்பிதழில் அவரது பெயரைக் காணவில்லை. எமக்கே அழைப்பிதழ் இரண்டாம் நாள் அதிகாலையே கிடைத்தது.

 ஆய்வரங்கொன்றுக்கு அறிஞர் ஏ.எம்.ஏ.அஸீஸ் அரங்கு என்று பெயர் சூட்டப்பட்டிருந்தது. ஆனால் அழைப்பிதழிலும் பதாதையிலும் ஏ.சி.எம். அஸீஸ் என்றே அவரது பெயர் இடம் பெற்றிருந்தது. இலங்கைக் கல்விச் சமூகத்துக்கு யாழ்ப்பாணம் தந்த ஒரு பேரறிஞர் அவர். இத்தவறைச் சுட்டிக் காட்டினோம். அறிவிப்புச் செய்த சகோதரரிடம் பெயரைத் திருந்தி வாசிக்கக் கோரினோம். அவர் சரியாக வாசித்தார். கலைவாதி கலீல் தவிர வேறு யாரும் அப்பெயரைச் சரியாகச் சொல்லவில்லை. எல்லோரும் ஏ.சி.எம். அஸீஸ் என்றே குறிப்பிட்டுப் பேசினார்கள். இலங்கையின் ஒரு பிரபல அறிஞரின் பெயரைச் சரியாகச் சொல்லத் தெரியாதவர்கள்தாம் அன்றைய ஆய்வரங்கில் பேசியவர்கள். இறுதி நாள் நிகழ்ச்சியின் போது கலைவாதி கலீல் ‘மூன்று முஸ்லிம்களுடைய பெயரால் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு முஸ்லிம் பெண் கவியரங்கில் கவிதை வாசிக்க அனுமதிக்கப்பட்டிருக்கிறார். நான் ஆய்வரங்கிலும் இங்கும் பேசுகிறேன். முஸ்லிம்களுக்கு அதிக இடம் வழங்கி விட்டார்கள்” என்று தன்னை மறந்து பேசினார். ஒரு முறையல்ல, மூன்று முறை மீண்டும் மீண்டும் இதைக் குறிப்பிட்டார். அங்கு நடந்தது தமிழ்ச் செம்மொழி விழாவே தவிர, இட ஒதுக்கீட்டு மாநாடல்ல. முஸ்லிம்களுக்கு இடம் தருவதற்கு முஸ்லிம்கள் ஒன்றும் இ;நாட்டில் இரண்டாந்தரப் பிரஜைகள் அல்லர். இந்த விழாவை நடத்திய எவரும் இன அடிப்படையில் சிந்திக்கவும் இல்லை. அவ்வாறான நிலையில் இவ்வாறு மத ரீதியாக, இன ரீதியாகப் பேசுவதும் பிரித்துப் பார்ப்பதும் ஒரு கல்வியாளன் செய்யும் காரியம் அல்ல. முஸ்லிம்களுக்கு இவ்வளவுதான் என்று வழங்குவதற்கு மன்னார்த் தமிழ்ச் சங்கத்துக்குத் தமிழை யாரும் தாரை வார்த்துக் கொடுக்கவில்லை. ஒருவன் தனது தாய்மொழியைப் பேசவும் எழுதவும் உள்ள உரிமை பிறப்போடு வருவது. அதை யாரும் பங்கு பிரித்துக் கொடுக்கத் தேவையில்லை என்பதை நண்பர் கலைவாதி கலீல் போன்றவர்கள் உணர வேண்டும்.

 விழாவின் வெற்றியை எந்நேரமும் நிறைந்த படியிருந்த அரங்குகள் உறுதிப்படுத்தின. சில வேளை நடந்து செல்வதற்குக் கூட நெருக்குப் பட வேண்டியுள்ளது. மற்றொரு விழாவை மன்னார் காண வேண்டுமாக இருந்தால் அரங்கு அகலமாக இருக்க வேண்டும். இந்த விழா மன்னாருக்கு மட்டுமல்ல, இந்தத் தேசத்துத் தமிழ் பேசும் அனைத்து நெஞ்சங்களுக்கும் ஓரு; எடுத்துக் காட்டான விழா. இதன் முழுப் பெருமையும் இதன் மூளையாவும் முதுகெலும்பாகவும் செயற்பட்ட தமிழ்நேசன் அடிகளாருக்கே உரியது. அவரது எதிர்கால முயற்சிகளும் தமிழுக்கு இன்னும் வலுச் சேர்க்கும் என்று ஒரு பெரும் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

 மன்னாரில் என்ன விசேசம் என்று கேட்டால் கழுதை, கருவாடு என்றுதான் எல்லோரும் சொல்லுவார்கள். இனிமேல் தமிழ்ச் சங்கம் என்று மட்டுமே சொல்ல வேண்டும்.

நன்றி: இருக்கிறம் - 61

 

சுதாராஜின் ‘உயிர்க் கசிவு’

September 27, 2010


என் மனக் கணக்கு

சுதாராஜ் என்ற படைப்பாளி பற்றியோ அவரது சிறுகதைகள் பற்றியோ பத்து நிமிடத்துக்குள் சொல்லி முடிப்பது என்பது தாமரைக் குளத்து நீரைத் தண்ணீர்ச் சொம்பில் தருவதற்குச் சமமாகும...


Continue reading...
 

குரல் வழிக் கவிதைகள்

September 26, 2010



“கவிதைப் புத்தகங்களை யாராவது எனக்குத் தந்தால் அவற்றை முன்னால் வைத்துப் பார்த்துக் கொண்டிருப்பேன். திறக்க மாட்டேன். அந்தக் கவிதைப் புத்தகம் என்னை என்ன செய்யுமோ என்ற அச்சம். சில சமயம் �...


Continue reading...
 

கூடு கட்டத் தெரியாத குயில்கள்

September 26, 2010

ஒரு ரசனைக் குறிப்பு

ஒரு படைப்பாளி தனது படைப்பை வெளிப்படுத்தப் பயன்படுத்தியருக்கும் மொழியானது ஒரு தேர்ந்த வாசகனைத் திருப்திப்படுத்துமாக இருந்தால் அப்படைப்பு ஐம்பது வீதம் வெற்றி பெ�...


Continue reading...
 

பாவலர் பஸீல் காரியப்பர்

September 23, 2010

கவிதைகளும் நினைவுகளும் - 2

முன்னாள் அமைச்சர் அல்ஹாஜ் ஏ.எச்.எம்.அஸ்வர் அவர்கள் ஏற்பாடு செய்து நடத்திய ‘வாழ்வோரை வாழ்த்துவோம்’ தொடரில் உங்களைக் கௌரவிக்க அழைத்த போது நீங்கள் ஏன் மறுத்தீர�...


Continue reading...
 

பாவலர் பஸீல் காரியப்பர்

September 23, 2010

கவிதைகளும் நினைவுகளும் - 1

இரண்டாயிரத்து ஆறு பெப்ரவரி 16ம் திகதி அந்தி சாயும்; வேளை எனக்கு அந்தத் தொலைபேசி அழைப்பு வந்தது. மிகத் தெளிவாக ஒலித்த அந்தக் குரல் சொன்னது.... “நான் பஸீல் காரியப்ப�...


Continue reading...
 

சந்தனப் பொய்கை

April 12, 2010

சந்தனப் பொய்கை
பாலமுனை பாரூக்கின் கவிதைகள்

அவசரங்களுக்குள்தான் சந்தனப் பொய்கையில் அவ்வப்போது நீந்த முடிந்தது.

 பாலமுனை பாரூக்கின் கவிதைகளைப் பற்றிப் பேசுவதற்கு முழு நூலையும் படிக்...


Continue reading...
 

வேலிகளைத் தாண்டும் வேர்கள்

April 12, 2010

வேலிகளைத் தாண்டும் வேர்கள்
அனுராதபுர மாவட்டத் தமிழ்க் கவிதைகள்

பொது மக்களை அசௌகரியத்துக்குள்ளாக்கும் இரண்டு தொல்லைகள் நீண்ட காலமாக இந்த நாட்டில் நிலவி வருகின்றன.

 எந்த விற்பன்னர்கள...


Continue reading...
 

மண் ஜெயிக்கும்

August 2, 2009

ஏ.ஆர்.ரஹ்மானின் ‘வந்தேமாதரம்’ இசை அல்பம் வெளியான போது அதில் இடம்பெற்றிருந்த பிரபலம் பெற்ற ‘தாய்மண்ணே வணக்கம்’ பாடலை மறந்திருக்கமாட்டீர்கள். ஓஹொவென அப்பாடல் புகழ் பெற, ரஹ்மானின் இசைய...


Continue reading...
 

மருதமுனையின் வரலாறு

July 21, 2009

வரலாற்று நூலில் நயம் தேடுவது எப்படி என்ற கேள்வி எழுவதற்கு நியாயங்கள் உள்ளன.

 திறனாய்வு அல்லது விமர்சனம் என்ற பெயரால் நூலாசிரியனை மனச்சிதைவுக்கு உட்படுத்துகிற அல்லது எழுத்தையும் எழு...


Continue reading...
 
 

Categories

Make a Free Website with Yola.